*"வெற்றிகரமான வாழ்க்கை''..*
ஒரு கிராமத்தில் ஒருவர் இரும்பு சாமான்கள் செய்து அதை விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அவருக்கு அன்பும், அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் சோதனைக் காலம் வந்தது. அவர் செய்து கொண்டு இருந்த தொழில் நலிவு அடைந்தது.
இதனால் வருமானம் குறைந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்து விட்டது. இதனால் அவர் மனதில் விரக்தி குடி கொண்டது.
ஒருநாள் அவர் மாலைவேளையில் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அவரது மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் வலிந்து ஓடியது.
இதைக் கண்ட மனைவி ஆறுதலாய்ப் பேசினாள். என்னங்க, எதுக்கு இப்படிக் கண் கலங்குறீங்க. இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதைப் பக்கத்துல இருக்கற கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே. அதை வெச்சு நாம வாழலாமே என்றாள்.
மனைவியின் ஆறுதல் அவருக்குப் புது நம்பிக்கை, புது உற்சாகத்தைக் கொடுத்தது. அடுத்த நாளே காட்டிற்குச் சென்று விறகுகளை வெட்டி விற்று வந்தார்
இந்தத் தொழிலால் அவருக்கு ஓரளவு வருமானம் கிடைத்தது. இருந்தாலும் அவரது மனதில் சற்று சோகமும் இருந்தது.
மனைவி ஒரு நாள் தன் கணவனிடம்,,என்னோட நகைய வித்தா கொஞ்சம் பணம் கிடைக்கும்.
அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வைக்கலாம். கடை வெச்சுட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க,
நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும் என்றாள். இதைக்கேட்டு அவர் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றார்.. விறகு வெட்டியாக இருந்தவர் விறகுக்கடை முதலாளி ஆனான்.
இதனால் வருமானம் பெருகியது. மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கையில், மீண்டும் அவனது வாழ்க்கையில் சோதனை ஆரம்பித்தது.
திடீரென்று ஒருநாள் அவரது விறகுக் கடையில் தீப்பிடித்து, அத்தனை மூலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.
இதைக்கண்டு கதறி அழுதார். நண்பர்கள் பலரும் வந்து அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.
மனைவி கணவனின் கண்ணீரைத் துடைத்து, இப்போ என்ன நடந்துருச்சுனு அழுதிட்டு இருக்கீங்க.
விறகு எரிஞ்சி வீணாவா போயிருக்கு. கரியாத் தானே ஆகியிருக்கு. நாம நாளையிலிருந்து கரி வியாபாரம் பண்ணுவோம் என்றாள்.
இதைக் கேட்ட பின் அவனுக்குத் தனது வாழ்க்கையில் மீண்டும் நம்பிக்கை ஒளி தெரிந்தது.
*ஆம்.,தோழர்களே.., :*
*ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் ஒருவர் நம்முடன் இருந்தால்*
*விண்மீனையும் எட்டிப் பிடித்து விடலாம்.*
*வாழ்க்கையில், நமக்கு ஏற்படும் துன்பத்தில் இருந்து மீள ஏதேனும் ஒரு வழி இருக்கும்.*
*அதைச் சரியான தருணத்தில் பயன்படுத்தினால் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறலாம்....✍🏼🌹*
0 Comments