Ad Code

Responsive Advertisement

Inspirational model - Raghavedra

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி வென்ற T20 உலகக் கோப்பையுடன், அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்,விராட் கோலி,கேப்டன் ரோஹித் சர்மா,ஹர்திக் பாண்டியா போன்றோர்,பதிவில் இருக்கும் இந்த படத்தில் இருப்பது தெரிகிறது...

ஆனால் இவர்களுடன் ஒரு குங்குமப் பொட்டுக்காரர் கூட இருக்கிறாரே? யார் அவர்?  

இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் என்ன சம்பந்தம்? 

எப்படி இவ்வளவு நெருக்கமாக? 

-- என்ற கேள்விகள் வருகிறதா? 

அந்த குங்குமப் பொட்டுக்காரரைப் பற்றி,2017லேயே,இந்திய கிரிக்கெட் அணியின் டாப் கிளாஸ் பேட்ஸ்மேன் விராட் கோலி,

"இவரால் தான் என் பேட்டிங் திறன் மேம்பட்டது.உலகின் எந்த ஒரு அதி வேகப் பந்து வீச்சையும் நான் எதிர் கொண்டு விளையாட காரணமே இவர் தான்.பயிற்சி ஆட்டத்தில் இவர் வீசும் 160 கிமீ வேக பவுலிங்கில் ஆடிய பின்னர்,உலகின் எப்படிப்பட்ட அதி வேகப் பவுலிங்கும் எனக்கு சாதாரணமாகத் தான் இருக்கிறது.." என்று பாராட்டியிருக்கிறார்.

விராட் கோலி மட்டுமல்ல மகேந்திர சிங் தோணி,சச்சின் டெண்டுல்கர் என இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் பலரும் அவரைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.

அந்த குங்குமப் பொட்டுக்காரரின் பெயர் தான் ராகவேந்திரா.சுருக்கமாக ரகு.

இவரது கதையை படித்த மாத்திரத்திலேயே அதை எழுதியே தீர வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு வந்தது.

வாழ்க்கைப் பாதையில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று,தன் இலக்கில் இருந்தும் லட்சியத்தில் இருந்தும் இம்மி பிசகாமல்,தடம் புரளாமல்,போராடி வென்றிருக்கும் இவரது வாழ்க்கை அனைவருக்குமே ஒரு ஆகச்சிறந்த பாடம்.

வட கர்நாடக மாநிலத்தில் கும்தா என்ற ஊர் தான் ராகவேந்திரா பிறந்த ஊர்.அப்பா பள்ளி ஆசிரியர்.மிகச் சிறிய வயதில் இருந்தே ராகவேந்திராவுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது தீராத வெறி.எப்படியாவது இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவது தான் இவரது கனவு.ஆனால் இவரது தந்தைக்கு தன் மகன் ரகு படிப்பில் ஆர்வம் காட்டாமல் கிரிக்கெட் விளையாடுவது துளி கூட பிடிக்கவில்லை.அதனால் ரகுவின் கிரிக்கெட் விளையாட்டிற்கு அவரது தந்தை தடைகளைப் போட்டார்.

"உனக்கு எது தேவை?படிப்பா?இந்த கேடு கெட்ட கிரிக்கெட்டா? முடிவு செய்து சொல்.." 

-- என ஒரு கட்டத்தில் அவரது அப்பா மிகக் கடுமையாக கேட்க,

"கிரிக்கெட் தான்.." என்று மனதிற்குள் பதில் சொல்லி விட்டு,தன் சட்டைப் பையில் இருந்த 21 ரூபாய் பணத்துடன்,மனம் முழுவதும் நிறைந்திருந்த தன் கிரிக்கெட் லட்சியத்தை தேட வீட்டை விட்டு வெளியேறினார் ரகு.

வீட்டை விட்டு வெளியேறிய ரகு நேராக வந்து நின்ற இடம்,வட கர்நாடகாவில் இருக்கும் ஹூப்பாளி என்ற ஊரில் செயல்படும் கர்நாடக மாநில கிரிக்கெட் அகாடமியில்.அங்கே நடைபெறும் கர்நாடகாவின் தார்வாட் மாவட்ட 19 வயதுக்கு உட்பட்டோர் அணிக்கான தேர்வில் பங்கேற்று,தேர்வாகி,அந்த அணிக்காக விளையாடுவது தான் ரகுவின் திட்டம்.

ரகுவால் அந்த அணிக்கான தேர்வில் தேர்வாக முடியவில்லை.

ஆனாலும் ரகு விடவில்லை.

அணியில் தேர்வாகும் வரையில் அந்த ஹூப்பாளி ஊரிலேயே தங்குது என முடிவு செய்தார்.

எங்கு தங்குவது? 

அந்த ஊரில் ரகுவுக்கு எவரையும் தெரியாது.கையிலும் பணமில்லை.

ஆனால் லட்சிய கனவு இருக்கிறதே? 

பகலில் அகாடமி வாசலில் பயிற்சிக்காக வருவார்,ஏதேதோ வேலைகளை செய்வார்.இரவில் ஹூப்பாளி நகரத்தின் பஸ் ஸ்டாண்டில் படுத்து தூங்குவார்.இப்படியாக இரு வாரங்கள் சென்றன.இந்த இரு வாரங்களில் பஸ் ஸ்டாண்டில் தங்குவதற்கு காவல் துறை பல முறை முட்டுக்கட்டை போட்டது.இப்படி பஸ் ஸ்டாண்டில் வந்து தூங்கக் கூடாது என அவர்கள் விரட்டினர்.

அடுத்து என்ன செய்வது என்ற நிலையில் அங்கிருந்த ஒரு அனுமன் கோவில் வாசலுக்கு தஞ்சம் புகுந்தார் ரகு.

இப்படியான சூழலில் ஒரு நாள் தார்வாட் அணியின் மூத்த பயிற்சியாளர் சிவானந்த் குஞ்சால் அந்த அகாடமிக்கு வருகையில் தற்செயலாக ரகுவைப் பார்த்தார்.ஏற்கனவே மாவட்ட அளவில் நடந்த ஒரு கிரிக்கெட் டோர்னமெண்ட்டில் ரகுவின் பவுலிங்கை சிவானந்த் பார்த்து இருக்கிறார்.அதை நினைவு படுத்தி,அது நீ தானே என்று கேட்க,அந்த நொடியில் ரகுவின் கிரிக்கெட் கனவில் மெல்லிய வெளிச்சம் விழுந்தது.

தார்வாட் அணியில் தேர்வானார் ரகு.

அந்த அகாடமிக்கு பக்கத்தில் இருந்த ஒரு சிறு அறையிலேயே ரகு தங்கிக் கொள்ள சிவானந்த் வழி செய்தார்.அது ஒரு பாழடைந்த அறை.அந்த அறையை அப்படியே ஒட்டினால் போல இருந்தது ஒரு சுடுகாடு.

சுடுகாடு அருகே இருந்த ஒரு பாழடைந்த அறையில் தங்கியபடி தார்வாட் அணிக்காக மகிழ்சியாக விளையாடிக் கொண்டிருந்தார் ரகு.

ரகுவின் இந்த மகிழ்ச்சி நெடு நாட்கள் நீடிக்கவில்லை.அதற்கும் ஒரு தடை வந்தது.

ஒரு நாள் ஒரு பயிற்சி ஆட்டத்தின் போது ரகுவின் வலது கை முறிந்தது.

இனிமேல் அவரால் பவுலிங் போடவே முடியாது என்ற நிலை வந்தது.

இந்த தருணத்தில் கூட ரகு மனம் தளரவில்லை.தன் நம்பிக்கையை கை விடவில்லை.ரகுவின் கை முறிந்து,இனி அவரால் பவுலிங் போடவே முடியாது என்ற நிலை வந்த போது,அவரு வயது பதினைந்திலிருந்து பதினாறு வயதிற்குள்ளாக தான் இருக்கும்.அந்த நிலையிலும் நிதானமாக,தெளிவாக இருந்தார்.

"கிரிக்கெட் தான் நம் வாழ்க்கை.அதில் எதாவது ஒரு வகையில் நாம் இருக்க வேண்டும்.பவுலிங் போட முடியாவிட்டால் என்ன,பயிற்சியாளராக மாறுவோம்.."

-- என்று திட்டம் போட்டார் ரகு.உடைந்தது தன் கை தானே தவிர,தன் உள்ளமோ அதில் அணையாமல் எரியும் தன் லட்சியமோ அல்ல என்பதில் ரகு உறுதியாக இருந்தார்.

அதற்கு பயிற்சியாளர் சிவானந்த்தும் உதவினார்.ரகு தரும் பயிற்சிகளைப் பார்த்து சிவானந்த் மனதில் வேறு ஒரு திட்டம் தோன்றியது.

"உனக்கு மிக வேகமாக பந்தை எறிய வருகிறது.நீ இங்கிருப்பதை விட பெங்களூரு செல்.அங்கே கர்நாடக மாநில கிரிக்கெட் அகாடமிக்கு செல்.கடிதம் தருகிறேன்.." 

-- என்று ரகு விடம் சொல்லி ஒரு கடிதமும் தந்தார் சிவானந்த்.அந்த கடிதத்தில் ரகுவைப் பற்றி Throw down Specialist என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் இருக்கும் Throw Down Specialist என்ற அந்த வார்த்தை தான்,தன் வாழ்வை எங்கோ உச்சானிக்கு கொண்டு போகப் போகிறது என்பது,பெங்களூர் வந்திறங்கிய ரகுவிற்கு அப்போது தெரியாது.

கர்நாடக மாநில ரஞ்சி டிராபி அணிக்கான ThrowDown பவுலராக ரகு பணி செய்து கொண்டிருந்தார்.

Throw down பவுலர் என்றால் வலைப் பயிற்சியில் ஈடுபடும் பேட்ஸ்மேன்களுக்கு மிக வேகமாக பந்தை எறிவது.அதாவது போட்டிகளில் ஒரு Fast Bowler எந்த வேகத்தில் பவுலிங் போடுவாரோ அதை விட வேகமாக பந்தை எறிவது தான் Throw down.அதில் தான் ரகு அட்டகாசமானவராக இருந்தார்.

அவரது ஒவ்வொரு பந்தும் கிட்டதட்ட 150 கிமீ வேகத்தில் வந்து விழுந்தன.இதைத் தான் சிவானந்த் கவனித்திருக்கிறார்.

பெங்களூருவில் Throwdown பவுலராக நான்கரை வருடங்கள் ரகு பயிற்சியாளராக இருந்தார்.இதற்காக ஒரு ரூபாய் கூட அவர் சம்பளமாகப் பெறவில்லை.

இந்த சூழலில் தான் ஒரு நாள் ஒரு பயிற்சியின் போது,கர்நாடக மாநில அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும்,அம்மாநில ரஞ்சி டிராபி அணியின் பயிற்சியாளருமான திலக் நாயுடுவின் கவனம் ரகு மீது விழுந்தது.அதைப் பார்த்து மிரண்டு போன திலக் நாயுடு,ரகு வை அழைத்துக் கொண்டு போய் ஜவகல் ஸ்ரீநாத்திடம் அறிமுகப்படுத்தினார்.

ஸ்ரீநாத் மூலமாக பிசிசிஐ கதவுகள் ரகுவுக்கு திறந்தன.

2008 களில் National Cricket Academy யில் பயிற்சியாளராக தேர்வானார் ரகு.

அப்போது தான் நெட் பிராக்டீஸில் சச்சின் டெண்டுல்கருக்கு Throw down பவுலிங் செய்யும் வாய்ப்பு ரகுவுக்கு வந்தது.

ரகுவின் திறமையைப் பார்த்து அசந்து போன டெண்டுல்கர் அவரை இந்திய கிரிக்கெட் அணியின் Throw down பயிற்சியாளராகவே பரிந்துரை செய்தார்.

இந்த பதினாறு வருடங்களில் இந்திய கிரிக்கெட் அணிக்காக குறைந்தது பத்து லட்சம் முறைகளாவது Throw down பவுலிங் செய்திருப்பார் ரகு.

சச்சின்,டிராவிட்,தோணி,சேவாக்,
விராட் கோலி,ரோஹித் சர்மா என சகலருக்கும் ரகு Throw Down பவுலராக இருந்திருக்கிறார்.

ஒரு காலத்தில் படுக்க கூட இடம் இல்லாமல்,சுடுகாட்டில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தங்கியிருந்த ரகு,இன்றைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நாடு நாடாகப் பறக்கிறார்.இப்போது நடந்த T20 உலகக் கோப்பை போட்டிகளில் கூட ரகு தான் Throw Down Specialist.

ரகுவின் இந்த பதினாறு வருட Throw Down பயிற்சியாளர் வாழ்வில் தங்கள் நாட்டு அணிக்கு பயிற்சியாளராக வரும்படி கேட்டு எத்தனையோ நாடுகள் தயாராக இருந்தன.அதற்காக கோடிகளைக் கொட்டித் தரவும் தயாராக இருந்தன.ஆனால் இவை எதுவும் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதே தன் லட்சியம் என சட்டைப் பையில் 21 ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய ரகுவின் மனதை மாற்றவில்லை.என் பயணம் இந்திய அணியுடன் மட்டும் தான் என்பதில் மிக உறுதியாக ரகு இருந்தார்,இருக்கிறார்.

"நம் தேவை,நம் பயணம்,நம் தேடல் இது தான் என தெளிவான நோக்கில் நாம் பயணித்தால்,நாம் வெல்ல இந்த ஒட்டுமொத்த இயற்கையும் உறுதியாகத் துணை நிற்கும்..." 

-- என அல்கெமிஸ்ட் என்ற புத்தகத்தில் Paulo Coelho எழுதியதைப் போல,

தெளிவான லட்சியமும்,அதை நோக்கிய தடம் மாறாத பயணமும்,நம்பிக்கையும்,உழைப்பும்இருந்தாலே போதும்.வாழ்வில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை சுக்குநூறாக உடைத்து தகர்த்து முன்னேறலாம்.எந்த நொடியிலும் கூட வாழ்வு நமக்கானதாக அட்டகாசமாக மாறும்....என்பதற்கு ரகு எனும் ராகவேந்திராவின் வாழ்வு தான் வரலாற்று சாட்சி.......
- FB post

Post a Comment

0 Comments


Ad Code

Responsive Advertisement