தண்ணீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றிவைத்துக் குடிப்பது நல்லது?
தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிப்பது எப்படி, தண்ணீரை எப்படிக் குடிக்க வேண்டும், எந்தப் பாத்திரத்தில் ஊற்றிவைத்துக் குடிப்பது நல்லது... அத்தனை விவரங்களையும் விளக்கமாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள் சித்தர்கள்.
இயற்கை பியூரிஃபையர்
சந்தைப்படுத்தப்படும் குடிநீரை அருந்துவதால் பல்வேறு உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்றன. சுத்திகரிப்பு என்ற பெயரில் நீரிலுள்ள சத்துகள் அனைத்தையும் எடுத்துவிடுகிறார்கள். சுத்திகரிக்கும்போது உடலுக்குத் தேவையான மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் நீங்கிவிடுகின்றன. இந்த நீரை அருந்துவதால், எலும்புகளும் பற்களும் பலவீனமடைகின்றன. அதிகரித்துவரும் சிறுநீரகப் பிரச்னைகளுக்கும் இது காரணமாகிறது.
தண்ணீரின் கடினத் தன்மையை மாற்ற, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றான்கொட்டையையும் பயன்படுத்தினார்கள். முன்பெல்லாம் வீட்டின் பின்புறமிருக்கும் கிணற்றில், நெல்லிமரக் கட்டைகளையோ, தேற்றான்கொட்டைகளையோ போட்டுவைப்பது வழக்கம். கிணற்றில் மட்டுமல்ல, மண்பானையில்கூட தேற்றான்கொட்டைகளைப் பொடியாக்கி, துணியில் கட்டிப் போட்டுவைக்கலாம். நம் வீட்டில் வரும் நீர் கடினமானதாக இருந்தால், கீழ்நிலை மற்றும் மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் நெல்லிக்கட்டை அல்லது தேற்றான்கொட்டையைப் போட்டுவைக்கலாம். நல்ல பலன் கிடைக்கும். சித்தர்கள் கடைப்பிடித்த இது போன்ற இயற்கைச் சுத்திகரிப்பு முறையைப் பின்பற்றினால் அசுத்தங்களும் தேவையற்ற கழிவுகளும் அழிந்துபோகும். ஆனால், தேவையான சத்துகள் ஒருபோதும் சிதையாது.
`கொதிக்கவைத்து ஆறவைத்த நீரையே அருந்த வேண்டும்’ என்கிறார்கள் சித்தர்கள். இதையே `நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பவர் தம் பேருரைக்கில் போமே பிணி’ என்று தேரையர் சித்தர், தனது ‘பிணி அணுகா விதி’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, ‘நீரைக் காய்ச்சியும், (வற்றவைத்து) மோரை நீர் சேர்த்துக் கலந்தும், நெய்யை உருக்கியும் சாப்பிடுபவர்களை நோய்கள் அண்டாது’ என்பதே அதன் பொருள். அது மட்டுமல்லாமல், வெந்நீரின் சிறப்புகளைப் பேசும் ஏராளமான பாடல்களை சித்த மருத்துவ நூல்களில் காண முடிகிறது. `பதார்த்த குண சிந்தாமணி’ நூலில் இடம்பெற்றிருக்கும் சித்தர் பாடலில்,
`நெஞ்செரிப்பு நெற்றிவலி நீங்காப் புளியேப்பம்
வஞ்சமுற வந்த வயிற்றுநோய் - விஞ்சியே
வீழாமக் கட்டோடு வெப்பிருமற் சுட்டநீர்
ஆழாக்குட் கொள்ள அறும்’
என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
‘வெந்நீர் குடித்தால் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் மறைந்து உணவு செரிமானமாகும். எந்த வகையான தலைவலியாக இருந்தாலும், மிதமான சூட்டில் வெந்நீர் குடித்தால் அது, நரம்புகளுக்கு இளக்கம் கொடுத்து, தலைவலியைக் குறைக்கும். அடிக்கடி வெந்நீர் குடித்துவந்தால், பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்; வாய்வுப் பிரச்னைகள் குறையும்; உடலிலுள்ள நச்சுப் பொருள்கள் வெளியேறும்’ என்று கூறுகிறது இந்தப் பாடல்.
வெந்நீர் அருந்துவதால் செரிமானம் சீராகும்; மலச்சிக்கல் தீரும்; உடல் எடை குறையும்; சளி, இருமல் கட்டுப்படும். முதுமை தள்ளிப்போகும்.
காய்ச்சி ஆறவைத்த நீரைக் குடிப்பதால் விக்கல், பித்தம், காதுவலி, வாந்தி, மயக்கம், உடல்சூடு, வயிற்றுப்புண் போன்றவை தீரும். எடுத்துக்கொண்ட நீரை, கால் பங்காகும்வரை காய்ச்சிக் குடித்தால் உடல்சூடு நீங்கும்.
அரைப் பங்காகும்வரை காய்ச்சிய நீரைக் குடித்தால் வாதம், பித்தம் விலகும். முதல்நாள் காய்ச்சிய நீரை மறுநாள் குடித்தால் வாதம், பித்தம், கபம் போன்ற பிரச்னைகள் நீங்கும். மூன்றில் ஒரு பங்காகும்வரை காய்ச்சிய நீரைக் குடித்தால், உடல்சூடு குறையும்; கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாதம், பித்தம், கபம் பிரச்னைகள் சரியாகும். இப்படி எந்த அளவுக்கு நீரைச் சுருக்கி அருந்துகிறோமோ அந்த அளவுக்கு அதன் பலன்களும் அதிகரிக்கும்.
`வெந்நீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றிக் குடிக்கிறோமோ அதற்கேற்பப் பலன்கள் மாறுபடும்’ என்றும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. அதன்படி, தங்கப் பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றிவைத்துக் குடித்தால் வாதநோய், சுவையின்மை, உடல் உஷ்ணம், வெப்பநோய்கள் விலகும். வெள்ளிப் பாத்திரத்தில் ஊற்றிவைத்துக் குடித்தால் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும். இரும்புப் பாத்திரத்தில் ஊற்றிக் குடித்தால் ரத்தச்சோகை நீங்கும்; நரம்புகள் உறுதியாகும். உடல் வெப்பநிலை சீராகும். மண்பானையில் வெட்டிவேர் அல்லது கருங்காலி மரக்கட்டை அல்லது சீரகம் போன்ற ஏதாவது ஒன்றை போட்டுவைத்துக் குடிக்க வேண்டும். இவற்றுடன் நீர்விட்டுக் காய்ச்சியும் அருந்தலாம். தேற்றான் கொட்டையை நீரில் போட்டு வைப்பதால், நீரிலுள்ள மாசு அகன்றுவிடும். அதேபோல நீரைக் கொதிக்கவைத்து, செம்புப் பாத்திரத்தில் ஊற்றிவைத்து, மறுநாள் குடிக்கலாம். இதனால், ஊறிய நீரில் தாமிரச்சத்து கலந்து கிருமிகளை அழிப்பதுடன் பல்வேறு சத்துகள் கிடைக்கும்.
`நீரை மருந்தாகவும் பயன்படுத்தலாம்’ என்கிறது சித்த மருத்துவம். இதற்கு நம் வழக்கத்திலிருந்த சில பழக்கங்களைக் குறிப்பிடலாம். உதாரணமாக, தண்ணீருடன் ஓமம் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘ஓம வாட்டர்.’ முன்பெல்லாம் வீடுகளில் தவறாமல் ஓம வாட்டர் கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்னை ஏற்பட்டால், ஓம வாட்டர் அல்லது ஓமம் சேர்த்துக் கொதிக்கவைத்த நீர் கொடுப்பார்கள்.
மருதம்பட்டையை, வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அருந்தினால் இதயம் பலப்படும். ரத்தம் உறைதல் பிரச்னையைத் தடுக்கும் நல்ல மருந்து இது. வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொதிக்கும் நீரில் புதினா இலைகளைப் போட்டுவைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்தால், வாய்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வளராது. இப்படி நீரில் சேர்க்கப்படும் மூலிகைகளுக்கு ஏற்ப அவற்றின் மருத்துவப் பலன்கள் மாறுபடும்.
எப்படி அருந்த வேண்டும்?
‘நீரை எப்படி அருந்த வேண்டும்’ என்றும் சொல்லிவைத்திருக்கிறார்கள். ‘பெருந்தாகம் எடுத்திடினும் பேயர்த்து நீர் அருந்தோம்’ என்கிறார்கள் சித்தர்கள். அதாவது, அதிக தாகம் எடுத்தாலும், ஒரு மடக்கில் (அதாவது ஒரே முறையில்) அருந்தக் கூடாது. சிறிது சிறிதாகவே அருந்த வேண்டும். அருந்தும் பாத்திரம் உதட்டில் படும்படியாக அருந்த வேண்டும். தண்ணீரை வாய் வைக்காமல் அண்ணாந்து குடிக்கக் கூடாது. `அண்ணாந்து குடித்தால் காது மந்தமாகும்’ என்று சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், சைனஸ் பிரச்னை, ‘டான்சிலைட்டிஸ்’ என்னும் தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி ஆகிய பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பாத்திரத்தில் உதடுபடும்படி நீர் அருந்தும் பழக்கமும் இன்று வழக்கொழிந்துவிட்டது. நம் நலன் காக்க சித்தர்கள் வகுத்துவைத்திருக்கும் பழக்கங்களை மீட்டெடுப்போம்... நோய்கள் நெருங்கா வாழ்க்கையை வாழ்வோம்!
NANDRI: VIKATAN
0 Comments