Recent Posts

Responsive Advertisement

உஞ்சவிருத்தி

உஞ்சவிருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம்.

உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம்.

இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம்.

உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட்டை வரை அரிசி கிடைக்கும். அதில் அன்றைய தேவைக்கு எனக்கானது போக மிஞ்சியதை நான் தங்கி இருக்கும் முதியோர் இல்லத்திற்கோ அரு கிலுள்ள அநாதை இல்லத்திற்கோ கொடுத்து விடுவேன்.’’ என்கிறார் கல்யாணராமன்.

“உபன்யாசம் நடக்கும் இடங்களில் பட்டுச் சேலை, பட்டு வேட்டி வைத்துக் கொடுப்பார்கள். அதைக்கூட நான் வைத்துக்கொள்வதில்லை. ஏழைப் பொண்ணுங்க திருமணத்துக்காகக் கொடுத்துவிடுவேன். உபன்யாசம் தவிர, ஜோதிடம் பார்க்கிறேன். எனது உபன்யாசத்தை சி.டி., பென் டிரைவ்களில் பதிவு செய்து விற்பனை செய்கிறேன். இதிலெல்லாம் கிடைக்கும் வருமானத்தையும் நான் வைத்துக் கொள்ளாமல் ஏழைப் பெண்கள் திருமணத்திற்காக பட்டு சேலை, மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து விடுவேன். எனக்காகவே பட்டுச்சேலையும் மாங்கல்யமும் விலை குறைத்துத் தருவதற்குத் தெரிந்த கடைக்காரர்கள் இருக்கிறார்கள்” என்கிறார்.

ராதே கிருஷ்ணா சொல்லிய படியே விடைபெறுகிறார் திருச்சி கல்யாணராமன்.  
‘கடவுள் உனக்கு நிறையக் கொடுப்பான். ஆனால், அதில் எதையுமே உனக்கென்று சேர்த்து வைத்துக் கொள்ளாதே; மற்றவர்களுக்கு கொடுத்துவிடு’ இது எனது தந்தையார் கைலாசம் எனக்குச் சொல்லிக் கொடுத்த வேதம். அந்த வேதத்தை நாற்பது வருடங்களாக விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன்’ என்கிறார் இதிகாச உபன்யாசகர் திருச்சி கல்யாணராமன்.

Post a Comment

0 Comments


Comments

Ad Code

Responsive Advertisement